தமிழ்நாட்டில் அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவிஉயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் இப்போது வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப்பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவிஉயர்வு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்ற வருடம் அக்டோபர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது.
ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று டிஎன்பிஎஸ்சி செயாலளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செந்தூர் என்பவர் உட்பட பலர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று கடந்த ஜனவரி 19ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் போன்றோர் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,” இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் தற்போது வரையில் சீனியாரிட்டி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பதவிஉயர்வு வழங்குவதில் எவ்வித நடவடிக்கையும் டிஎன்பிஎஸ்சி எடுக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் அதுசார்ந்த பட்டியலை கூட தயாரிக்கவில்லை” என்று தெரிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆகவே விரைவில் நடைமுறைப்படுத்துவோம்” என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், “அடுத்த 3 வாரத்தில் இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.