சிறுமியை கடத்தி சென்ற கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கல்லூரி மாணவரான ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருச்சியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 27-ஆம் தேதி ஆசை வார்த்தைகள் கூறி ஆகாஷ் சிறுமியை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆகாஷ் சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆகாஷை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.