கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில் தேர்வு எழுதி கொண்டிருந்தபோதே திடீரென மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மைசூரில் உள்ள டி-நரசிபுரா நகரத்தில் உள்ள அக்கூர் கிராமத்தை சேர்ந்த அனுஸ்ரீ என்ற மாணவி அரசுப் பள்ளி ஒன்றில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். கன்னட மொழி பாடத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அந்த மாணவி விடைகளை எழுதிக் கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து தேர்வு அறையில் இருந்த ஆசிரியர், மற்ற ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நரசிபுரா அரசு மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததோடு, மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் உறுதி செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.