தமிழகத்தில் கடந்த வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனிடையில் தேர்தல் சமயத்தில் அவர்கள் பல்வேறு வாக்குறுதியையும் தெரிவித்திருந்தனர். அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக ஏராளமான தொகுதியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக தங்களது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின், அவர்களுக்கு ஓய்வூதியம் வரும்படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.
தமிழக அரசுக்கு இருந்த நிதி பற்றாகுறையின் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் சென்ற 2003ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய ஓய்வூதிய திட்டமானது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் இந்த திட்டத்துக்கு அரசு ஊழியர்களில் சார்பில் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஊழியர்கள் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக விடுத்தது வருகின்றனர்.
தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின்போது உயிரிழந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் குடும்பங்கள் ஓய்வுக்கால பயன்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். ஆகவே குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ஓய்வுக்கால பயன்களை வழங்க வேண்டும் என்ற அவர்களின் அடிப்படையான கோரிக்கையை பரிசீலிப்பதற்கு கூட தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் முன்வராதது கண்டிக்கத்தக்கது ஆகும் என்று வலியுறுத்தியுள்ளார்.