ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி மீனாட்சி தலைமையில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்துள்ளனர். அவை,
முள்ளம்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் மாணவ -மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் வீடியோவில் வரும் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி உள்பட பல மாவட்டங்களில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எஸ்.டி என சான்றிதழ் வழங்கப்பட்டு அவர்கள் படிப்பதற்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. தற்போது இந்த சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவானி ராமச்சிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் காய்கறி, பழங்கள் மற்றும் கால்நடை தீவனங்கள் போன்றவற்றை பயிரியிடுகிறோம். எங்கள் பகுதியில் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நிலத்தை பாதிக்கிறது. எனவே சிமெண்ட் தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலப்ப கவுண்டன் வலசு பகுதியில் கியாஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் இருந்து 100 அடிக்குள் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்படுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே கிடங்கு அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்.
ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, தேவம்பாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தின் மேற்கு பகுதியில் குரங்கன் ஓடை செல்வதால் மழை காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. தற்போது தடுப்பணை கட்டும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே தடுப்பணை கட்டும் பணியை அரசு நிறுத்த வேண்டும்.
மேற்கூறிய கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.