காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயபுரம் பகுதியில் தங்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவரான மரிய ஜோசப் என்ற மகன் உள்ளார். இவரும் காயல்பட்டினம் சிங்கித்துறை பகுதியில் வசிக்கும் இருதயசாமியின் மகளான பிக்சியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இருவரும் காயல்பட்டினம் சிங்கித்துறையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிக்சியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த உறவினர்கள் பிக்சியாவை உடனடியாக மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பிக்சியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பிக்சியாவின் தந்தை இருதயசாமி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தந்து மகளிடம் மரிய ஜோசப் தகராறு செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். இதனால்தான் பிக்சியா தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மரிய ஜோசப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.