சென்னை மாநகராட்சியில் ஹலோ டாக்டர் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ஹலோ டாக்டர் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் மூலமாக நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் மெய்நிகர் முறையில் மருத்துவ ஆலோசனை வழங்குவது, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வீடுதேடி வந்து சிகிச்சை அளிப்பது, தீவிர நோயாளிகளுக்கு மருத்துவர் நேரடியாக வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அமைந்துள்ளது.
இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தமிழகம் மருத்துவத்தில் முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த வகையில் சென்னையில் ஹலோ டாக்டர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 2007-ஆம் வருடம் தொடங்கப்பட்ட மாநகராட்சி திட்டத்தின் மூலமாக தினந்தோறும் ஒரு பகுதிக்கு சென்று ஒரு முகாம் அமைத்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தது. இத்திட்டம் தனியார் மருத்துவத்தின் சேவையை உலகம் முழுவதும் புரிந்து கொள்ளும் விதமாக அமைந்தது.
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக இதுவரை 57 லட்சத்து 1 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். இதேப்போன்று சாலை விபத்துகளை தடுப்பதற்காக இன்னுயிர் காப்போம் என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக இதுவரை 38,117 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் தொற்று 35- க்கும் கீழ் குறைந்துவிட்டது என்றும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து வெற்றி கிடைத்துவிட்டது என்று அலட்சியமாக இருக்காமல், அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.