Categories
தேசிய செய்திகள்

லேட்டா வந்தா என்ன ? ”லேட்டஸ்ட்டா பணம் கொடுப்போம்”- பியூஷ் கோயல்…!!

தேஜஸ் ரயில்கள் தாமதமானால் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திடம் பயணிகள் இழப்பீடு பெறுவதுபோல், ரயில்களில் சரக்குகள் தாமதமானால் வாடிக்கையாளர்கள் விரைவில் இழப்பீடு பெறலாம் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிறுவன தினம் டெல்லியில் நடந்தது. இதில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது, “டெல்லி-லக்னோ, மும்மை-ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன.

இந்த ரயில்களைப் போலவே, சரக்குகள் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய வேண்டும். இதற்கான உறுதிப்பாட்டை வழங்க வேண்டும். மாறாக தாமதமாகிவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும். இது தொடர்பாக விவாதிக்க ரயில்வே வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளேன். தேஜஸ் ரயில்கள் பாணியில் பணியாற்றுவோம்” என்றார்.

மேலும், ரயில்வே சரக்குகளுக்காகவும், பயணிகள் வேகமாகச் செல்லவும், பாதையை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கு சரக்கு ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிப்பது குறித்து கோயல் பேசினார். நிறைவாக, 500 கி.மீ. தூரத்தை நிறைவுசெய்ததற்காக டி.எஃப்.சி.சி.ஐ.எல். (பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமானம்) அணிக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்ததோடு, 2020 மார்ச் மாதத்திற்குள் 991 கி.மீ. இலக்கை அடையுமாறு அறிவுறுத்தினார்.

இந்திய ரயில்வே துறையில் முதன்முறையாக, தனியார் நிறுவனமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. இதன்மூலம் தேஜஸ் ரயில் ஒருமணி நேரத்திற்கும்மேலாக தாமதமாகிவிட்டால் ஒவ்வொரு பயணிக்கும் தலா ரூ.100 இழப்பீடு செலுத்துகிறது. இந்த இழப்பீட்டுத் தொகை காலதாமதத்துக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |