திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் படகுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே இறையுமன்துறை பொழிமுகம் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படகுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து கொல்லங்கோடு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் 2 படகுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து நித்திரவிளை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.