சென்னை பல்லாவரம் 31 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்ரா தேவி. இவருடைய கணவர் முரளியின் தம்பி தினேஷ் (வயது 38). இவர் திருநீர்மலை திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ளார். தினேஷும், அவரது நண்பரும் திமுகவின் உறுப்பினருமான சுகுமார் என்பவரும் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளுக்குச் சென்று இரண்டு பேரும் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது. மாமூல் கொடுக்க கடை உரிமையாளர்கள் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தினேஷும், சுகுமாரும் கடைகளில் இருந்த பிரியாணி மற்றும் பொருட்களை தூக்கி வீசியதோடு, கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இது அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து, கடையின் உரிமையாளர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக பிரமுகர் மற்றும் அவருடைய நண்பர் சுகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் மீதும் மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.