மின்சார வாகனங்கள் வெடித்து சிதறுவதை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக மக்கள் மின்சார வாகனங்களை நாடியுள்ளனர். இந்த மின்சார வாகனங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மின்சார வாகனங்கள் ஆங்காங்கே வெடித்து சிதறுவதால் தற்போது மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி வேலூரில் மின்சார வாகனம் வெடித்து சிதறியதில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேப்போன்று கடந்த மார்ச் 28-ஆம் தேதி திருவள்ளுவர் மற்றும் திருச்சி மணப்பாறை பகுதியிலும் மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறியது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 29-ஆம் தேதி சென்னை மாதவரத்திலும் மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறியது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இப்படி தொடர்ந்து மின்சார ஸ்கூட்டர்கள் வெடித்து வரும் சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திற்கு ஒன்றிய அரசு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதாவது தொடர்ந்து மின்சார வாகனங்கள் வெடித்து சிதறுவது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.