தண்ணீரில் மூழ்கி சைக்கிள் கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்திநகரில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது உறவினருக்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருகன்குளத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஆற்றங்கரையில் திதி கொடுத்து விட்டு அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் குமார் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குமாரின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.