லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் வழக்கறிஞரான ஆனந்த தேவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஆலங்குளத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணபேரி வடக்கே சாஸ்தா கோவில் அருகில் சென்று கொண்டிருந்த போது ஆனந்த தேவாவின் மோட்டார் சைக்கிள் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்த தேவாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆனந்த தேவா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.