மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்தான் சேமிப்பின் முதல் தேர்வாக இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதன்படி அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டத்திற்கு வட்டியானது வங்கிகளை விட அதிகமாக கிடைக்கிறது. சிறு முதலீட்டில் அதிக முதிர்வுத் தொகையை பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றில் நடப்பு நிதியாண்டு குறைந்தபட்சம் தொகையை மார்ச் 31 (இன்று) டெபாசிட் செய்யாவிட்டால் திட்டம் செயலற்றதாகி விடும் என்று போஸ்ட் ஆபிஸ் அறிவித்து உள்ளது. பொதுவருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் இன்றுக்குள் குறைந்தபட்சம் ரூ.500 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைத்து கொள்ளலாம்.
நடப்பு நிதியாண்டு எவ்விதமான தொகையையும் செலுத்தாமல் இருந்தால் ரூபாய் 50 அபராதம் வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் நிலுவைத் தொகைக் கட்டணமாகவும் ரூபாய் 500 வசூலிக்கப்படும். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் பிபிஎப் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்சம் தொகையினை கணக்கில் செலுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு குறைந்தபட்சம் தொகையை செலுத்தாவிட்டால் கணக்கு காலாவதி ஆகிவிடும். அத்துடன் கணக்கினை உயிர்ப்புசெய்யாமல் பிபிஎப் கணக்குதாரர், தனது கணக்கிலுள்ள பணத்திலிருந்து கடன் பெற இயலாது. ஆகவே மார்ச் 31 இன்று குறைந்தபட்ச தொகையை செலுத்திவிட வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்ட கணக்குதாரர்கள், நடப்பு நிதி ஆண்டில் இதுவரையிலும் பணம் செலுத்தாமல் இருந்தால் இன்று குறைந்தபட்சமாக ரூ.1000 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம்.
அவ்வாறு செலுத்தாமல் இருந்தால் கணக்கு காலாவதி ஆகிவிடும். இதனால் மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர ரூபாய் 100 அபராதம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்குதாரர், நடப்பு நிதியாண்டில் எந்தத் தொகையையும் செலுத்தாமல் இருந்தால் இன்று குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்க வேண்டும். ஒருவேளை நடப்பு நிதி ஆண்டு எந்தத் தொகையும் செலுத்தாமல் இருந்து அடு்த்த நிதியாண்டு செலுத்தினால் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு வருடமும் வசூலிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.