கடலூரில் கர்ப்பிணி பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவரும் 7 மாத கர்ப்பிணியான இவரது மனைவி கிருஷ்ணவேணியும் நேற்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையைடுத்து கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்யக்கோரி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து 6 பேர் கொண்ட கும்பல் ஒருவரை மட்டும் அழைத்து விசாரித்து விட்டு பின் விடுவித்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்று கார்குடல் பஸ் நிலையத்தில் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் கர்ப்பிணி பெண்ணை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும், காவல்துறையினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது. இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கும்பலை கலைத்தது. இருப்பினும் போராட்டத்தினால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.