மாநகராட்சி மண்டலத் தலைவர்களுக்கான தேர்தல் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் 52-வார்டுகள் அமைந்துள்ளது. இந்த வார்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் மூலமாக கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த மாநகராட்சி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வடக்கு மண்டலத்தில் 14-வார்டுகளும், கிழக்கு மண்டலத்தில் 13-வார்டுகளும், தெற்கு மண்டலத்தில் 13-வார்டுகளும், மேற்கு மண்டலத்தில் 12-வார்டுகளும் இடம்பெற்றுள்ளது. இந்த மண்டலங்களுக்கான தலைவர் போட்டி தேர்தல் நடைபெற்றது. இதற்கு தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர் ஆஷா ஆஜித் நியமிக்கப்பட்டார்.
இந்தத் தேர்தலில் வடக்கு மண்டல தலைவர் போட்டிக்கு 16-ஆவது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஜவஹர் போட்டியிட்டார். இதனையடுத்து கிழக்கு மண்டல தலைவர் போட்டிக்கு 40-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் அகஸ்டினா கோகிலவாணி போட்டியிட்டார். அதன்பிறகு மேற்கு மண்டலத்திற்கு 2-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செல்வகுமாரும், தெற்கு மண்டலத்திற்கு 50-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் முத்துராமனும் போட்டியிட்டனர். ஆனால் இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக மண்டலத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான வெற்றி சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையர் ஆஷா ஆஜித் வழங்கினார்.