சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு போகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் மூலம் பாசனம் பெற்று வருகின்றன. இந்த தண்ணீரை விவசாயிகள் நலனுக்காக 4 மண்டலங்களாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் முதலாம் மண்டல பாசனத்திற்காக 4-வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பி.ஏ.பி திட்டத்தின் மூலம் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 15, 600 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்த தண்ணீரின் மூலம் தென்னை, மக்காச்சோளம், காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.
இத்தகவலின்பேரில் கோவை மாவட்ட பி.ஏ.பி கூட்டு கண்காணிப்பு குழுவை சேர்ந்த கோவை தெற்கு ஆர்டிஓ இளங்கோ, சூலூர் தாசில்தார் சகுந்தலா மணி, பி.ஏ.பி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் தேவராசன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, ஆதிசிவன், காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் சுல்தான்பேட்டைக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் செஞ்சேரிமலை – கொடுவாய் பிரதான வாய்க்காலில் இரவு திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது இரவு நேரத்தில் தண்ணீர் திருடப்படுகிறதா? என்று வாய்க்கால் ஓரத்தில் நடந்து சென்று பார்த்தபோது தண்ணீர் திருடவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது, பி.ஏ.பி வாய்க்காலில் மோட்டார் வைத்து சட்டவிரோதமாக தண்ணீரை திருடினால் பாரபட்சம் எதுவும் இல்லாமல் உடனே மின்சாரம் துண்டிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.