பணகுடி பேரூராட்சியில் அட்டகாசம் செய்த 2 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பேரூராட்சியில் உள்ள சூசையப்பர் வடக்கு ரத வீதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 தினங்களாக இரண்டு குரங்குகள் சுற்றி திரிந்தன. இந்த குரங்குகள் வீடுகள், சமையலறைகளில் புகுந்து பழங்கள், மீன்கள், முட்டைகள், சமையல் பொருட்களை தின்று சேதப்படுத்தி வந்துள்ளன. இதைத்தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் குரங்குகளை விரட்டினால் அவர்கள் மீது பாய்ந்து பயமுறுத்தி உள்ளது.
மேலும் ஒரு சில வீடுகளில் வெடி வைத்து குரங்கை விரட்டி உள்ளனர். மேலும் சின்ன குழந்தைகளை பயமுறுத்தி வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள், கவுன்சிலர் பூங்கோதை ஆகியோர் சேர்ந்து பூதப்பாண்டி வனசரக அலுவலர் திலீபனிடம் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் பனங்குடி வனவர் மணிகண்டன் மேற்பார்வையில் வனக்காப்பாளர் முத்துராமலிங்கம், வேட்டை தடுப்பு காவலர் சரவணன், ஜெகன் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்தார்கள்.
அதன்பின் புனித சூசையப்பர் ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 29-ம் தேதி 5 இடங்களில் கூண்டு வைத்து அந்தக் குரங்கை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது நேற்று காலை ஒரு கூண்டில் இரண்டு குரங்குகளும் சிக்கிக் கொண்டது. அதன் பின்னர் வனத்துறையினர் பிடிப்பட்ட குரங்குகளை கூண்டோடு ஒரு வண்டியில் ஏற்றி பணங்குடி மலைப் பகுதிக்கு கொண்டு விட்டனர்.