Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த பெண்…. “குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் கொடுங்க”…. நீதிமன்றம் உத்தரவு..!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் வாரிசுகளுக்கு ரூபாய் 3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பை அருகில் ஆலடியூர் பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27- ம் தேதி  என் தாயார் சவரியம்மாள் எங்கள் ஊரில் இருக்கின்ற மணிமுத்தாறு பேரூராட்சி மூலம் பராமரிக்கப்படும் பொது கழிப்பறை சென்றுள்ளார். அப்போது அந்த கழிப்பறையின் வாசலில் அறுந்து தொங்கிய மின்சார ஒயரில் அவரது உடல் பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். எனது தாயாரின் இறப்பிற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கலெக்டர், தாசில்தார், பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அதன்பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீனா இது சம்பந்தமாக நெல்லை மாவட்ட கலெக்டர், அம்பை தாசில்தார், மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் சார்பாக தலைமை எழுத்தர் கோர்ட்டில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ததில் சவரியம்மாள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது விபத்து என்றும், பொது கழிப்பறையில் மின்னிணைப்பு முறையாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அம்பை தாசில்தார் ஆஜராகி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் இறந்த சவரியம்மாளின் வாரிசுகளுக்கு நிதி உதவி வழங்க நெல்லை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து இருக்கிறேன். அதனடிப்படையில் கலெக்டர் நிவாரண நிதியை வழங்க பரிந்துரை செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இறந்தவரின் சட்ட வாரிசுகளுக்கு இழப்பீடாக ரூபாய் மூன்று லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் கலெக்டர் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |