தி.மு.க. அலுவலக திறப்புவிழா மற்றும் பிரதமரை பார்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அந்த அடிப்படையில் பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஸ்டாலின் நாடாளுமன்றம் சென்றபோது அவரை தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது சுமார் 30 நிமிடங்களில் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.
பிரதமரிடம் என்ன பேசினார்…?
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள், உணவுப்பொருட்கள் போன்றவைகளை கொடுத்து உதவ அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வகையில் இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகத்தின் வழியே இலங்கை தமிழர்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து ஆபத்தான கடல் பயணத்தில் பச்சிளம் குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் 16 நபர்கள் தமிழகம் வந்த நிலையிலும், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் மேலும் தமிழ்நாட்டிற்கு வரும் சூழலிலும் பிரதமரிடம் முதல்வர் இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
முக்கியமான கோரிக்கைகள்
மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவித்தல், மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம்,மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி, ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தல் ஆகிய முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.