நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவர் தமிழக பாஜகவின் கலாச்சாரப் பிரிவு தலைவியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவரை பாஜகவில் இருந்து நீக்கப் போவதாக சில வதந்திகள் பரவி வந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக காயத்ரி ரகுராம் இரண்டு ட்வீட்டுகள் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னை பாஜக ஒருபோதும் விரட்டியடிக்காது. பாஜக பெண்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு கட்சி. இந்த பாரத தாய் பூமியில் பெண்களுக்கு மதிப்பு கூடிய ஒரே கட்சி என்றால் அது பாஜக தான். எங்கள் தலைவருக்கு உழைப்பவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து தான் பழக்கமே ஒழிய விரட்டியடிக்கும் பழக்கம் கிடையாது ” என அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது ட்வீட்டில் என்னை துரத்தி அடிக்க வேண்டும் என எண்ணுவது திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தான். திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் என்மேல் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் ஒரு ட்வீட் போட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு உடல்நிலை சரியில்லை தயவு செய்து என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். எனக்கு கட்சி தாவும் பழக்கம் எல்லாம் கிடையாது. என்னால் முடிந்தவரை பாஜகவிற்கும், மோடிக்கும், நாட்டுக்கும் உழைப்பேன். நான் ஒரு வலிமையான இந்து சனாதன மாமி” என கூறியுள்ளார்.