இயற்கை எழில் கொஞ்சும் சமூகத்தை உருவாக்குவதே அண்ணல் காந்தியடிகளின் கனவாக இருந்தது. இந்த கனவுக்கு தடையாக இருப்பது பிளாஸ்டிக் ஆகும். பிளாஸ்டிக்களுக்கு எதிரான போராட்டத்தை ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகரான திருப்பதி நகராட்சி தற்போது தொடங்கியுள்ளது.
இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. உள்ளூர் வாசிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரை தவிர்த்து, திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பொருட்கள் தூக்கி எறியப்பட்டதால் நகரம் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டது.
திருப்பதியில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய நகராட்சி நிர்வகம் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதல் முடிவு செய்தது. அதன்படி, பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவை சார்பில் பேரணி, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு ‘பிளாஸ்டிக் பஹிஷ்காரனா ஜெயபெரி’ என்று பெயரிடப்பட்டது. இது சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தானாக முன்வந்த மக்கள் பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சியிடம் மறுசுழற்சிக்காக ஒப்படைத்தது.