குழந்தைக்கு கிலுகிலுப்பை வாங்கி கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அதன் மணிகள் உதிர்ந்து விடாமல் இருப்பது அவசியம். உதிர்ந்தால், அவற்றை குழந்தைகள் எடுத்து விழுங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. அதே மாதிரி, குழந்தைக்கு ஏழெட்டு மாதமாகும் போது பல்வரத் தொடங்கும். அப்போது ஈறு கொழுத்து, கையில் கிடைத்ததையெல்லாம் கடிக்கத் துடிக்கும். அந்த சமயங்களில் பல பெற்றோர்கள் “டீத்தர்” எனப்படும் கடிப்பானை வாங்கித் தருவார்கள். கடிப்பானை அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டியது முக்கியம். இல்லாவிட்டால் தொற்றுநோய் ஏற்பட்டுவிடும்.
சில குழந்தைகளுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. அடிப்பது, கடிப்பது, கையிலிருக்கும் பொருளை தூக்கியெறிவது என்று முரண்டு பிடிப்பார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் அவர்களை கண்டுகொள்ளவே வேண்டாம். முகத்தை இறுக்கமாக வைத்துகொண்டு “நோ” சொல்லுங்கள். நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள். தானாகவே வழிக்கு வந்துவிடுவார்கள்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிறு குழந்தைகளை அடிப்பது மட்டும் கூடாது. முரட்டுத்தனமும் வீம்பும் தான் வளரும். “தான் செய்த விஷமத்துக்கான தண்டனைதான் இந்த அடி” என்பது அவர்களுக்கு புரியாதே!
ஒழுக்கமாக வளர்ப்பது என்பது, தவறுகளுக்கு தண்டனை அளித்து சரி பண்ணுவது மட்டுமல்ல… நல்ல விஷயங்களுக்கு மனமார பாராட்டுவதும் தான்! சொல்லப்போனால், தண்டனையைவிட பாராட்டுக்குத்தான் பலன் அதிகம்.
குழந்தைகள் ஏழெட்டு வயதைத் தொடும்போது, நீங்கள் இன்னும் கொஞ்சம் உஷாராக வேண்டும். கொடுத்த வாக்கை நீங்கள் காப்பாற்றினால்தான் அவர்கள் உங்கள் வார்த்தையை மதிப்பார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை” வெளியில் கூட்டிப் போகிறேன் ” என்று வாக்குறுதி அளித்தால் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அதேமாதிரி, தண்டனை விஷயத்திலும்…! பீச்சுக்கு போகும்போது ஆட்டோவில் ஆட்டம் போட்ட குழந்தைகளை கட்டாயப்படுத்தி “நீங்க இப்படி ஆட்டம் போட்டா, திரும்பி வீட்டுக்கே போக வேண்டியதுதான்…. என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். அப்படியும் குழந்தைகள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படாவிட்டால் தாட்சாண்யமே பார்க்காமல் திரும்பிவிடுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கு “அப்பா, அம்மா சொன்னதை செஞ்சுடுவாங்க…”என்ற பயம் இருக்கும்.
மரியாதை முதலில் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. குழந்தைகளிடம், “தேங்க்யூ….”, “ப்ளீஸ்….”, “ஸாரி….”, போன்ற வார்த்தைகளை சொல்ல கஞ்சத்தனம் காட்ட வேண்டாம். நல்ல சூழலில் வளரும் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் இயல்பாகவே மலரும்.