பிரிட்டானியா பிஸ்கட் விலை உயருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பணவீக்கம் என்பது அண்மைக்காலமாக சூறாவளி போல் சூறையாடி வருகிறது. இந்த பணவீக்கத்தால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதுபோதாதென உக்ரைன் – ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை மற்றும் பல்வேறு உள்ளீட்டுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதையடுத்து பால், காபி, டீ, நூடுல்ஸ் என உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பிஸ்கட் விலையும் உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய பிஸ்கட் விலையும் உயருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டானியா நிறுவனம் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் நிலைமை மோசமாக உள்ளதால், பிஸ்கட் விலையை 7% உயர்த்த முடிவு செய்துள்ளது.
மேலும் இதுகுறித்து பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் பெரி புளூம்பர்க் ஊடகத்திடம் பேசியுள்ளதாவது, “கடந்த 2 ஆண்டுகளாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அண்மையில் ரஷ்யா – உக்ரைன் போரால் விநியோக அமைப்பு பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு பணவீக்கம் 3% உயரும் என எதிர்பார்த்த சூழலில், ரஷ்யாவின் செயலால் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து சுமார் 8-9% அதிகரித்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகள் போல இதுவரை எப்போதும் தொழில் மோசமாக இருந்ததில்லை.
இந்த விலை உயர்வானது நுகர்வோரை பாதிக்கும். அதனால் பிஸ்கட் பாக்கெட்டில் எடையை குறைக்கலாம். ஆனால் மக்கள் புத்திசாலிகள் என்றும் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். எனவே, விலை உயர்வு தாக்கம் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.