இங்கிலாந்து உளவுத்துறை, சொந்த நாட்டு போர் விமானங்களையே ரஷ்ய வீரர்கள் சுட்டு வீழ்த்துவதாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ஜெர்மி பிளமிங், “ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மக்களின் எதிர்பார்ப்பை தவறாக கணித்துவிட்டார். அதோடு மட்டுமில்லாமல் போரால் விதிக்கப்பட்டு வரும் பொருளாதார தடைகளின் பின்விளைவுகளையும் புதின் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். மேலும் உக்ரைன் போரில் தனது ராணுவத்தின் திறனை உயர்த்தி மதிப்பிட்டு விரைவில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் உள்ளார். ரஷ்ய வீரர்கள் பலர் போதிய ஆயுதங்கள், மனவலிமை இன்றி உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.
தங்கள் சொந்த ஆயுதங்களையே அவர்கள் அழித்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தங்கள் சொந்த போர் விமானங்களையே ரஷ்ய வீரர்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்துகின்றனர். அதேசமயம் ரஷ்ய அதிபர் புதினின் ஆலோசகர்கள் உக்ரைன் மீதான போரை தவறாக கணித்து விட்டோம் என்பதை அவரிடம் தெரிவிக்க பயப்படுகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.