ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கி பொதுமக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி செல்லும் ரயில்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் நின்று செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பாசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டது. மேலும் கீரனூரில் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனையடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் சார்பாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் ஆகியவை நடத்தப்பட்டது. ஆனாலும் ரயில்கள் கீரனூரில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. நேற்று கீரனூர் ரயில் நிலையம் முன்பாக பொதுமக்கள் பந்தல் அமைத்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.