ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் கூறியுள்ளதாவது, ‘இது நல்ல வெற்றி. குறைந்த அளவில் உள்ள ஸ்கோரை விரட்டும் போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். இறுதியில் ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்திற்கு சென்று விடக்கூடாது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.
அதனை அவர்களது பவுலர்கள் சரியாக பயன்படுத்தினர். மூன்று நாட்களுக்கு முன்பு இந்த மைதானத்தில் நடந்த போட்டியில் இரண்டு அணியும் 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடிந்தது. தற்போது இரண்டு அணியும் 120 ரன்களை எட்டுவதே கடினமாகி விட்டது. நாங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் ஜெயிக்க வேண்டும் என்று விரும்பினோம். எப்படியோ வெற்றி, வெற்றி தான். இறுதியில் தினேஷ் கார்த்திக் அனுபவம் எங்களுக்கு உதவியது. இறுதி கட்டத்தில் தோனி எப்படி பதட்டம் இல்லாமல் செயல்படுவாரோ? அதேபோன்று தினேஷ் கார்த்திக்கும் பொறுமையாக செயல்பட்டு அசத்துகிறார்’ என்றார்.