சென்னை மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் சிக்கி தவித்த நிலையில், அவர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படை மீட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து மார்ச் 13ஆம் தேதி அன்று ஒரு படகில் 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் ஆந்திர கடலோர பகுதியில் கடந்த 25-ம் தேதி அன்று வந்து கொண்டிருக்கும்போது படகின் இன்ஜினில் திடீரென்று தொழில்நுட்பம் காரணமாக பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் சிக்கி தவித்தனர். உடனே அவர்கள் தங்களை மீட்குமாறு இந்திய கடலோர பாதுகாப்பு படையினரிடம் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான “பிரியதர்ஷினி” கப்பல் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறந்தபடி கடல் மார்க்கம் சுற்றிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர கடலோர பகுதியில் மீனவர்கள் தத்தளித்து நின்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல் மூலம் தொழில் நுட்ப உதவி கொண்டு சென்னை மீனவர்களின் கப்பல் இஞ்சினில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டன. அதன்பின் பிரியதர்ஷினி கப்பல் அணிவகுக்க 9 மீனவர்களும் விசாகப்பட்டினத்திற்கு பத்திரமாக தாங்கள் வந்த படகிலே அழைத்து வரப்பட்டனர்.