கர்நாடகா மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்தது. இதையடுத்து கர்நாடக அரசின் இந்த உத்தரவை உறுதி செய்து அம்மாநில ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதன்பின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் முடிவடைந்து சற்று அமைதி திரும்பியது. இந்நிலையில் இந்து கோவில்கள் கடைகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வணிகர்கள் வியாபாரம் செய்யக்கூடாது என சில இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக தட்சிணகன்னடா, உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் இவ்விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
எனினும் இந்த விஷயத்தில் தலையிட மாட்டோம் என மாநில அரசு கூறிவிட்டது. இந்த நிலையில் முஸ்லிம்கள் நடத்தும் கடைகளில் ஹலால் இறைச்சி வாங்க கூடாது என்ற விவகாரம் புதிதாக வெடித்துள்ளது. ஹலால் முறையிலான இறைச்சி வாங்க வேண்டாம் எனவும் இந்துக்களின் கடைகளில் இறைச்சிகளை வாங்கவும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் மதரீதியிலான விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆகவே தற்போது மத மோதல்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “அமைதி மற்றும் வளர்ச்சிக்கு கர்நாடகம் பெயர் பெற்று இருப்பதால் அனைவரும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இத்தனை வருடங்களாக நமது நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எனவே எந்த பிரச்சினையும் ஏற்படாதவாறு பொதுமக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். சமூக ரீதியாக பல பிரச்சினைகள் வரும்போது அவற்றுக்கு பேச்சுவார்த்தை வாயிலாக சுமுக தீர்வுகாண முடியும். கர்நாடக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.