தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில் நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள பேளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடியதாக புகார் வந்துள்ளது. இதனடிப்படையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் யோகா விஷ்ணு புகார் அளித்த விவசாயிகளிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பேளூர் கூட்டுறவு சங்கத்திலும் இதுதொடர்பாக அன்று இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று சேலம் கூட்டுறவு சங்க களப்பணி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில், கூட்டுறவு துறை அலுவலர் வேலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கடந்த 10 வருடங்களாக வைக்கப்பட்ட நகைகள், தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் போலியான நகையா? என்றும், அந்த நகையில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டு உள்ளதா? என்றும் பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து புகார் அளித்த விவசாயிகள், பொதுமக்கள், வங்கி ஊழியர்களிடம் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை குறித்து சேலம் மாவட்ட கூட்டுறவு துறை தலைமை அலுவலர் பேசியதாவது, பேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மொத்தம் 224 பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் இதுவரை 180 நகைகளை பயனாளிகள் வாங்கி சென்றிருக்கிறார்கள்.
அந்த நகைகளில் ஏதேனும் குறை இருந்தாலும் கூட்டுறவுத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். மேலும் இருதரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு உண்மையாகவே நகை வெட்டி திருடப்பட்டுள்ளதா ? அல்லது வேண்டுமென்றே புகார் கொடுக்கப்பட்டுள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு வாரத்திற்குள் நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.