பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த கொள்ளை சம்பவங்கள் ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள் மற்றும் செல்போன் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் அரங்கேறியது. இந்த கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் கொள்ளையர்கள் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் ஒரு குழு திருமன்னம் சந்திப்பு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் மறித்து சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் அவரிடம் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வள்ளிவிலை பகுதியைச் சேர்ந்த ஷாலு என்பது தெரியவந்தது. இவரும் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மிதுன் என்பவரும் சேர்ந்து பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து முகமூடி மற்றும் குல்லா அணிந்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஷாலுவிடம் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மிதுனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.