அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கு விடுமுறை வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளவு கடந்த 2016ஆம் ஆண்டு ஆறு மாதங்களாக இருந்துள்ளது. மேலும் அது ஒன்பது மாதங்கள் ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தீபலட்சுமி மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில் எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்றாவது முறை கர்ப்பம் ஆனேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்20.9.21 மகப்பேறு விடுப்பு கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் முதல் இரண்டு பிரசவத்திற்கு மட்டும்தான் விடுமுறையில் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என தனது விண்ணப்பத்தை மதுரை மாநகராட்சி உதவி கமிஷனர் நிராகரித்துவிட்டார். மதுரை மாநகராட்சி உதவி கமிஷனர் அளித்த உத்தரவை ரத்து செய்து தனது மூன்றாவது பிரசவத்திற்கு 12 மாத மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு கடந்த 1993ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் உயிருடன் இருக்கும் 2 குழந்தைகளுக்கான பிரசவத்துக்கு மகப்பேறு விடுமுறை வழங்கலாம் மற்றும் அதே நேரத்தில் இது சம்பந்தமான பிரதான விதியில், திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நீதிமன்றம், விதிகளை விட பிரதான விதி மேற்பட்டதாக கருதுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு பெண் ஊழியர் 3 வது குழந்தைக்கு மகப்பேறு விடுமுறை பெற தகுதியானவர், அதனால் மனுதாரர் தீபலெட்சுமிக்கு 12 மாதம் மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.