தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து 2004ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அத்துடன் 2006ஆம் ஆண்டு பணி வரன்முறை செய்யப்பட்டார். அவ்வாறு பணியில் சேர்ந்தது முதல் பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்ககோரி முத்து அளித்த மனுவை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 2019 ஆம் வருடம் நிராகரித்தார். இதையடுத்து அவரது உத்தரவை ரத்துசெய்து 2004 முதல் பணி வரன்முறை செய்யக் கோரி முத்து உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழகத்தில் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இதனிடையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மக்கள் வரிப்பணித்திலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. அவ்வாறு கவுரவமான ஊதியம் பெறும் ஆசிரியர்களின் பொறுப்பும், கடமையும் தனியார் நிறுவன ஊழியர்களைக் காட்டிலும் பல்வேறு மடங்கு அதிமாக இருக்க வேண்டும். ஆசிரியர் தொழிலானது புனிதமான ஒன்று. ஆசிரியர்கள் நன்னடத்தை கொண்டவராக இருக்க வேண்டும். இப்போது ஒருசில ஆசிரியர்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட பல கொடூர குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகிறது. இது போன்ற ஆசிரியர்களின் நடத்தையை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களின் நடத்தைகளை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் உரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு உயர்அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். ஆகவே தமிழக பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வழக்கில் மனுதாரர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டு உள்ளார். ஆனால் 2004-ஆம் ஆண்டு முதல் பணி வரன்முறை செய்யக்கோரி 2019-ல் தான் மனு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி மனுதாரர் 2004-ஆம் ஆண்டு பணி நியமன விதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.