மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு குறைவான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக கூறவேண்டும். அதோடு அந்த திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்குள் கூலி வழங்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 35 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் மத்திய அரசின் நிதியை குறைப்பது எந்தவிதத்திலும் நியாயம் அல்ல என கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக எம்எல்ஏ கூறியதாவது, இந்த திட்டத்தை வைத்து நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம். நீங்கள் கூறுவது எதுவும் உண்மை அல்ல. கடந்த 2014ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூபாய் 33 ஆயிரம் கோடி தான் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு ரூபாய் 1.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே உண்மை என்னவென்று தெரியாமல் எங்களை பற்றி நீங்கள் குறை சொல்ல வேண்டாம் எனக்
குறிப்பிட்டுள்ளார்.