பொதுமக்கள் விரட்டி சென்றதால் திருடன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கரையான்சாவடி பக்கிங்காம் தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடினார். இதனை பார்த்ததும் பொதுமக்கள் அவரை துரத்தி சென்றனர். அப்போது அருகிலிருந்த காலி மைதானத்திற்குள் மர்ம நபர் எதிரி குதித்ததாக தெரிகிறது. அதன்பின் பொதுமக்கள் தேடியபோது மைதானத்திற்குள் இருந்த பாழடைந்த கிணற்றில் விழுந்து அந்த நபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கி இறந்த திருடனின் சடலத்தை மீட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் அவரின் சடலத்தை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர்கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. மதுபோதையில் மோட்டார் சைக்கிளை திருட சென்ற சங்கர் கணேஷ் பொதுமக்கள் தன்னை பிடித்து அடித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஓடியபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது.