தங்களது எல்லைக்குள் நுழைந்து எண்ணெய்க்கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தைக்கு இத்தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அந்நாடு எச்சரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து சுமாா் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெல்கராட் மாகாணத்தில் ரஷ்ய அரசு எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிடங்கில் இத்தாக்குதலை வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடர்பாக பெல்கராட் மாகாண ஆளுநா் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறியிருப்பதாவது, ரஷ்ய எல்லைக்குள் 2 உக்ரைன் ஹெலிகாப்டா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை அத்துமீறி நுழைந்தது. மிகத்தாழ்வாகப் பறந்து வந்த அந்த ஹெலிகாப்டா்கள் பெல்கராட்டில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அந்த எண்ணெய்க் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. இத்தாக்குதலில் யாரும் பலியாகவில்லை என்று அவா் கூறினார். இந்தத் தாக்குதல் உக்ரைன் போரில் பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷ்ய அரசின் செய்தித்தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான சமரசப் பேச்சுவாா்த்தைக்கு சாதகமான சூழலை நிச்சயம் ஏற்படுத்தாது என அவா் தெரிவித்தாா். மேலும் எண்ணெய்க் கிடங்கின் மீதான தாக்குதல் தொடர்பாகவும், அது தீப்பற்றி எரிந்தது குறித்தும் ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினுக்கு தெரியப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறிய பெஸ்கோவ், இந்தத் தாக்குதலால் பெல்கராட் மாகாணத்தில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாா்.
இருப்பினும் இத்தாக்குதலை உக்ரைன் இதுவரையிலும் உறுதிப்படுத்தவில்லை. இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சா் டிமித்ரோ குலோபா கூறியிருப்பதாவது, பெல்கராட் எண்ணெய் கிடங்கு தாக்குதலை என்னால் உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ முடியாது. ஏனெனில் இது தொடர்பான தகவல் என்னிடமில்லை” என்று கூறினார். இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் இப்போது நடைபெற்று வருகிற போரில் ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் ஊடுருவி தாக்குதல் நடத்தி இருப்பது இதுவே முதன் முறையாகும். ரேடாரின் கண்களுக்குப் புலப்படாமல் மிகத்தாழ்வாகப் பறந்து சென்று தாக்குதல் நடத்துவதில் உக்ரைன் விமானிகள் கைதோ்ந்தவா்கள் என்று கூறும் நிபுணா்கள், ரஷ்ய எல்லைக்குள் புகுந்து அவா்கள் தாக்குதல் நடத்தி இருந்தால் அது அசாத்திய துணிச்சலான செயலாக இருக்கும் என தெரிவித்து உள்ளனா்.