100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 2 நாட்களாக வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 84 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாகனங்களுக்கு ரூபாய் 760 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை செலுத்திவிட்டு உரிமையாளர்கள் மோட்டார் சைக்கிளில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறையினர் அறிவித்திருந்தனர். அதன்படி இதுவரை 78 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகனங்களை பெற்றுக் கொண்டதுடன் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதமாக வாகனங்களை நிறுத்த மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று 3-வது நாளாக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சோதனையில் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.