ரயில் பயணத்தின்போது அடிப்படை தேவைகள் இல்லாததால் பயணிகளுக்கு இழப்பீடாக ரூபாய் 20 ஆயிரம் வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த குருவாசலில் சசிதரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொச்சுவேலி விரைவு ரயிலின் ஏ.சி பெட்டியில் ராஜஸ்தானின் பிகானேரிலிருந்து கோழிக்கோடு நோக்கி பயணம் மேற்கொண்ட குடும்பத்தினர் 2013 ஆம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினர்.
அதாவது, கழிவறைக்குள் செல்ல முடியாத அளவுக்கு கழிவுகள் நிரம்பி இருந்தது. அதுமட்டுமல்லாமல் தண்ணீர் இல்லை. அடுத்த கம்பார்ட்மென்ட்டில் பார்த்த போதும் அதே நிலைமைதான். இது தொடர்பாக ரயில்வேயில் புகார் கொடுக்கப்பட்டது. முதலாவதாக எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரை ஏற்க ரயில்வே அதிகாரிகள் தயாராக இல்லை. அவரது வற்புறுத்தலின் பேரில் தான் புகார் ரசீதுக்கு பின்னர் ஆவணப்படுத்தப்பட்டது.
ஆகவே பலன் கிடைக்காததால் மாவட்ட நுகர்வோர் மன்றத்தை அணுகினர். நீதிமன்றத்திலிருந்து பல்வேறு முறை நோட்டீஸ் அனுப்பியும், வழக்கு விசாரணையின்போது ரயில்வே தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து அந்த வழக்கறிஞரை பணி நீக்கம் செய்தனர். நீண்ட 9 வருடங்களுக்கு பின் நுகர்வோர் நீதிமன்றம் அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.