வனப்பகுதிக்குள் வினோத செடி உரசியதால் வழிதவறி சென்ற பெண்ணை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரா விறகு எடுப்பதற்காக ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியுமாகியும் சந்திரா திரும்பி வராததால் வனத்துறையினர் அவரை தேடி பார்த்து உள்ளனர். அப்போது இருள் சூழ்ந்து விட்டதால் வனத்துறையினர் தேடும் பணியை கைவிட்டு தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பெண்ணைத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி பகுதியில் தேயிலை பறிக்கும் உடையுடன் நின்று கொண்டிருந்த சந்திராவை அதே பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு வனத்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சின்னக்கல்லார் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, வனப்பகுதியில் இருக்கும் திசை திருப்பான் செடி நம் மீது உரசினால் நமக்கு சுயநினைவு இருக்காது. அதன்படி சந்திரா மீது வினோத செடி உரசியதால் சந்திரா சுயநினைவை இழந்து திசை தெரியாமல் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்துள்ளார். இதனையடுத்து சுய நினைவு வந்ததும் இருள் சூழ்ந்து விட்டதை அறிந்த சந்திரா ஒரு பாறை இடுக்கில் இரவு முழுவதும் இருந்துள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை வனப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ளார். இதனையடுத்து யாராக இருந்தாலும் தனியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.