16 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் புகார் கொடுத்தவரையும், குற்றம்சாட்டப்பட்டவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் உள்ள தரமணி மகாத்மா காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் 50 வயதுடைய வையாபுரி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றேன். என்னைப்போன்று சிவகுமார் என்பவரும் உதவியாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் தற்காலிக பணியாளரை நிரந்தரமாக்க ரூ 2 லட்சத்தை கொடுங்கள் அதற்கு ஏற்பாடு செய்வதாக சிவகுமார் கூறினார்.
அதை உண்மை என நம்பி நானும் ரூ2 லட்சத்தை கொடுத்துவிட்டேன். என்னைப்போல மேலும் பல வேலைகளுக்கு இரண்டு லட்சம் வீதம் எனக்குத் தெரிந்தவர்களிடம் வசூலித்து ரூபாய் 16 லட்சத்தை சிவகுமாரிடம் கொடுத்ததேன். ஆனால் அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. தனக்கும் பணிநிரந்தரம் செய்யவில்லை.
ஆகவே என்னிடம் வாங்கிய ரூபாய் 2 லட்சம் உட்பட ரூபாய் 18 லட்சத்தை மோசடி செய்தஅவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க கோட்டூர்புரம் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மோசடி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில் வேளச்சேரியில் உள்ள விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் 51 வயதுடைய சிவகுமார் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது அவர் அளித்த தகவல்கள் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ரூ 18 லட்சம் கொடுத்தது உண்மை. ஆனால் அந்த பணத்தை நான் மட்டும் செலவு செய்யவில்லை. என்னுடன் சேர்ந்து வையாபுரியும் செலவு செய்தார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வையாபுரி நல்லவன் போல நடித்து போலீசிடம் சிக்காமல் இருக்க இந்த புகாரை என்மீது கொடுத்துள்ளார் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் புகார் கொடுத்த வையாபுரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வையாபுரி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.