Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… ரோப்கார் சேவையில்… ரூபாய் 15 டிக்கெட் ரத்து… ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமம்..!!

பழனி முருகன் கோவிலில் ரூபாய் 15 டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் ரோப்கார் சேவையை பயன்படுத்த ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இந்த 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ஆனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் செல்ல ரோப் கார், மின் இழுவை ரயில் சேவைகள் இருக்கின்றன.

மேலும் பாதயாத்திரை செல்லும் நபர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவோர்கள் படிக்கட்டு பாதைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற நபர்கள் பெரும்பாலும் இயற்கையை ரசித்தபடி ரோப்கார் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த ரோப்கார் செயல்பாட்டிற்கு அடிவாரம் கிழக்கு கிரிவிதி, மலைக்கோவில் பகுதிகளில் ரோப் கார் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரோப் காரில் பயணம் செய்வோர்க்கு ரூ 15 டிக்கெட்டும், முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்வோருக்கு ரூ 50 டிக்கெட்டும் வசூலிக்கப்படுகிறது. அதாவது இரு முறைகளில் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டத்தை குறைக்க ரூ 15  கட்டணம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 50 ரூபாய் டிக்கெட் சேவை இருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடு குறைந்து வரும் நிலையில் இருப்பதால் பழனி முருகன் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரோப்கார் வழியே செல்லும் பக்தர்களுக்கு ரூபாய் 50 ரூபாய் கட்டணம் வசூலிப்பதால் ஏழை எளிய மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

எனவே ரூபாய் 15 கட்டணத்தை மீண்டும் கொண்டு வரவேண்டுமென்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் சிலர் பேசியதாவது, ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்களுக்கு பழனி ரோப் காரில் பயணிக்கும் வகையில் 15 ரூபாய் டிக்கெட் இருந்தது. ஆனால் தற்போது 50 ரூபாய் கட்டணம் இருப்பதால் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ரோப்கார், மின் இழுவை ரயில் சேவை மிகச் சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. ஆனால் தற்போது 15 ரூபாய் கட்டணம் ரத்து ஆனதால் எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. இதனால் வசதி படைத்தவர்களால் மட்டுமே ரோப்காரில் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே மீண்டும் 15 ரூபாய் கட்டணத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு அறநிலைய  துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |