டெல்லியின் முக்கியமான சாலையிலுள்ள கடையில் கடந்த புதன்கிழமை அன்று தன் நண்பர் ஷரஃபத் அலியுடன், கிர்தார் லால் (39) டீ குடிக்க சென்று உள்ளார். அப்போது கிர்தார் லால் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் அங்கு பார்சல் டீ வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் பாதி தூரத்தை கடந்த பின் தான் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கவில்லை என்பது லால் நினைவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து லால் தன் நண்பர் அலியிடம் பிஸ்கட் வாங்க மறந்ததை சொல்லி மீண்டும் கடைக்கு சென்று வாங்கி வருவதாக தெரிவித்து உள்ளார். இதனால் நண்பர் அலி வேண்டாம் இதற்காக திரும்ப செல்லாதே என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் லால் சாலையை கடந்து சென்று பிஸ்கட் வாங்கிவிட்டு மீண்டும் சாலையை கடந்து இருக்கிறார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த தார் ஜீப் ஒன்று திடீரென லால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
அதன்பின் பலத்த காயமடைந்த லாலை அங்கு இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லால் முன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் லால் தனது மனைவி ரேகா, 12, 10, 6 வயதில் 3 மகள்கள் மற்றும் 2 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். தற்போது விபத்தில் லால் உயிரிழந்தது அந்த குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உயிரிழந்த லாலின் சகோதரி ஜான்சி பேசியபோது, எங்களுக்கு நடந்தது என்ன?.. என்பது தொடர்பாக சரியாக தெரியாது. இதனிடையில் சி.சி.டி.வி காட்சிகளை பார்க்கும்போது இது விபத்து போன்று தெரியவில்லை. எனது தம்பியும், அவனது மனைவியும் ஒப்பந்த கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனர். அவனுக்கு தினமும் ரூபாய் 800 சம்பளம், அவனது மனைவிக்கு ரூ.400 சம்பளம். இதனை வைத்துதான் அவர்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர்.
தற்போது ரேகா தனியாக எப்படி குழந்தைகளை பார்த்து கொள்வார் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியாகியா சிசிடிவி காட்சிகளில் வேகமாக வரும் சிவப்பு நிற மஹிந்திரா ஜீப், வண்டியை நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இடதுபக்கத்தை முழுவதுமாக கடந்தபோதிலும் அவர் மீது அந்த ஜீப் மோதுவது தெரிகிறது. அதனை தொடர்ந்து ஜீப் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்நபர் அருண் (27) என்பதும், அவர் வாடகை காரில் தனியாக வந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.