தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீர்பள்ளி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான சுமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சின்னதம்பி என்பவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சேட்டு, ரஞ்சித், அன்பு, முரளி ஆகிய நான்கு பேரும் இணைந்து சின்னதம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை சுமன் கண்டித்துள்ளார். அப்போது கோபமடைந்த முரளி உட்பட 4 பேரும் கட்டையால் சுமனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த சுமன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முரளி உட்பட 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கிராம மக்கள் சூளகிரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தலைமறைவாக இருப்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்த பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.