விவசாயியை அடித்து கொன்ற சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமத்தில் விவசாயியான வேலாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் சகோதரர்களான முருகன், லட்சுமணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். தற்போது லட்சுமணன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் வீடு கட்டும் பணியின் போது அள்ளப்படும் மண் நெல் பயிரிட்டிருந்த வேலாயுதத்தின் நிலத்தில் விழுந்தது. இது தொடர்பாக வேலாயுதம் முருகன், லட்சுமணன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த முருகன் உலக்கையால் வேலாயுதத்தின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த வேலாயுதத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வேலாயுதம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.