தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின்படி போதைப்பொருள் மற்றும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தரவின்படி கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் மற்றும் தக்கலை பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரயில்வே நிலையங்களில் ரயில்வே ஏ.டி.ஜிபி அனிதா உத்தரவின்பேரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரயில் நடைபாதையில் வந்து நின்றது. இந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கிய பிறகு காவல்துறையினர் ரயிலுக்குள் சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது முன்பதிவில்லா ஒரு பெட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. இதில் சுமார் 25 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை கடத்து வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.