இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், மின்சாரம், உணவு பொருள் ஆகியவற்றின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல வாகனங்களும் இந்தப் போராட்டத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை விசாரணையின்றி நெடுங்காலம் சிறையில் அடைக்கவும், கைது செய்யவும் கூடுதல் அதிகாரங்கள் பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கட்டுக்குள் கொண்டுவர அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சியை உருவாக்க வேண்டும் என்று யோசனை கூறியுள்ளார். அதேபோல் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவையை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.