திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையல் , “வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை” உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு எடுத்த – அ.தி.மு.க. ஆட்சிக்குத் தலைமை வகித்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால்தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது” என்று அபாண்டப் பழி சுமத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த சட்டம் என்றாலும் – வன்னியர் சமுதாயத்திற்கு அளித்த உள் இடஒதுக்கீட்டை நிலைநிறுத்திட உயர்நீதிமன்றத்திலும் – உச்சநீதிமன்றத்திலும் அனைத்து விதமான வாதங்களையும் முன் வைத்தது – மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
எந்த எந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள் என்பது தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது. அதுகூட வேறு ஏதோ மயக்கத்தில் உள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கும் தெரியவில்லை. எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கும் புரியவில்லை. எங்கள் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற நடத்திய சட்டப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் – எடப்பாடி பழனிசாமியும், சண்முகமும் வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.