1971ல் நடந்த பேரணி குறித்து இல்லாத ஒன்றை பேசவில்லை என்றும், பத்திரிகைகளில் வந்ததை தான் நான் பேசினேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார்.
இது பெரியாரிய ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினி முற்றிலும் பொய்யான தகவலைக் கூறி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் பெரியார் குறித்த தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளார் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். பல்வேறு இடங்களிலுள்ள பெரியாரிய ஆதரவாளர்களும் பெரியாரிய அமைப்புகளும் ரஜினிகாந்த்துக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவருகின்றனர். ரஜினிகாந்த் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரியார் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, இல்லாத ஒன்றையோ, கற்பனையாகவோ, தவறாகவோ எதுவும் நான் கூறவில்லை. நான் கேள்விப்பட்டது. 2017ஆம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகைகளில் வந்ததை தான் நான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். 1971-ல் சேலத்தில் ராமர், சீதை உருவங்கள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என்றும் தெரிவித்தார்.