திடீரென படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த பகுதியில் இருக்கும் தடுப்பணை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வார்கள். இந்நிலையில் நேற்று திடீரென படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதாவது இங்கு இயக்கப்படும் படகுகள் கடையல் பேரூராட்சிக்கு சொந்தமானவை ஆகும்.
இந்த படகுகள் குத்தகைதாரர்கள் மூலம் இயக்கப்பட்டு வந்தது. இப்போது குத்தகை காலம் முடிந்து விட்டதால் பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் தொகை செலுத்துமாறு கூறியுள்ளது. மேலும் கடந்த வருடம் கொரோனா பாதிப்பால் படகு சவாரி முற்றிலுமாக முடங்கியது. இதன்காரணமாக குத்தகைதாரர்கள் கூடுதல் பணத்தை செலுத்த மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பேரூராட்சியில் புதிதாக ஏலம் விடப்பட்டு குத்தகை எடுக்கப்பட்ட பிறகு தான் படகு சவாரி மீண்டும் இயக்கப்படும்.