தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர்.
இந்நிலையில் திமுக அரசு மக்களின் தலையில் 150% சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தனக்கென கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல் படும் நிலையையும், வாடகைக்கு குடி இருப்பவர்கள் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து உயர்த்துவதும், மேலும் வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்தும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு சொத்து வரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசை கண்டித்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பாக ஏப்ரல் ஐந்தாம் தேதி காலை 10 மணி அளவில் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.